ஒரு பெரிய நாவலை விட சில நேரங்களில் ஒரு சிறுகதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் பெரியதாக இருக்கும். அதைப் போல ஒரு சிறு கருவை பெரும் படைப்பாய் கொடுத்து புதுமை செய்திருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.
திரைப்படம் என்பது காட்சி ஊடகம் என்பதை புரிந்து கொண்டு வசனங்களுக்கான இடங்களைக் குறைத்துவிட்டு பல முன் கதைகளும் பின் கதைகளும் காட்சிகளின் மூலமாகவே விளக்கப்பட்டிருந்தது அருமை.
நடிகர்கள் தேர்வு, கதைக்களம், கதைக்கரு, காட்சியாக்கம் என அனைத்தும் தரம்.
ஒரு சிறுவன் தன்னளவில் தன் தகப்பனை எவ்வாறெல்லாம் எதிர்த்து நிற்க முடியும் என்பதை சிறு சிறு நிகழ்வுகளிலும், முக பாவங்களின் வழியும் அற்புதமாகக் காட்டியுள்ளனர்.
மதுரையை அண்டியிருக்கும் ஒரு வறண்ட கிராமம், அங்கு வாழும் மனிதர்கள், அதன் வாழ்க்கை முறை என அனைத்தையும் உண்மைக்கு மிக நெருக்கமாகவே படமாக்கியிருக்கின்றனர். கதைக்களத்தோடு தொடர்புடையவர்கள் பார்த்தால் நிச்சயம் வேறு ஒரு அனுபவத்தைக் கொடுக்கும்.
சரி… எல்லாம் இருக்கட்டும். முழு நீளத் திரைப்படம் உலகப் படமாக, பல விருதுகளை வாங்கிக் குவிக்க வேண்டும் என்றால் அதன் ஆக்கம் இத்தனை மெதுவான திரைக்கதையில்தான் நிகழ வேண்டுமா?
உலக சினிமா விழாக்களில் திரையிடப்படும் பல திரைப்படங்கள் இத்தகைய மெதுவான காட்சிப்படுத்தலோடுதான் இருக்கிறது. வெகுஜன சினிமாவாக ஒரு உலகப்படம் உருவாகவே முடியாதா.
மண் சார்ந்த படம் என்பதுதான் உலகப்படம் என்றால் வடசென்னை, City of God போன்ற திரைப்படங்களும் உலகப்படங்கள்தானே. அதன் திரைக்கதையின் வேகம் நம்மை கதைக்களத்திற்குள்ளேயே ஈர்த்துக் கொண்டுவிடும் அல்லவா.
இத்தகைய புதிய யுக்திகள் கொண்ட படைப்புகள் வரவேற்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டியவைதான். ஆனால் உலக சினிமா என்றாலே இப்படித்தான் அமைய வேண்டும் என்று எல்லோருமே இப்படியே படம் எடுக்கத் தொடங்கி விட்டால் ஒரு கட்டத்தில் நிச்சயம் சோர்வாகிவிடும்.
கதை நிகழும் பரப்பை அப்பட்டமாகப் பதிவு செய்திருப்பதால் அந்நிலவாழ் சாமான்யர்களில் சரளமான கெட்ட வார்த்தைகள் படம் முழுக்கவுமே பட்டுத் தெரிக்கின்றன. எனவே குடும்பத்தோடு பார்க்கும் பொழுது அத்தகைய வார்த்தைகள் நெருடலாக இருக்குமென உணர்ந்தால் தனியாகப் பார்த்து ரசிக்கலாம். மெதுவாகவே நகர்ந்தாலும் கூழாங்கள் நல்ல காட்சியனுபவத்தைக் கொடுக்கும் ஒரு திரைப்படம்.
-கு.ப. சிவபாலன்