‘ஆதார்’ சினிமா விமர்சனம்

ஆதார்‘ சினிமா விமர்சனம்

விளிம்புநிலை மனிதர்கள் மீதான அதிகார வர்க்கத்தின் அராஜகப் பாய்ச்சலை மையப்படுத்திய பரபரப்பான கிரைம் திரில்லர்; சற்றே அழுத்தமான கதைக்களத்தில்.

பணக்கார வர்க்கத்திற்கு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு உதவுவதற்காக காவல்துறை எனும் அதிகார வர்க்கம் எந்தளவுக்கும் இறங்கும், எந்தவிதமான படுபாதகச் செயல்களையும் தயக்கமின்றிச் செய்யும் என்பதற்கு பல உதாரணங்கள், பல திரைப்படங்கள். மற்றொரு ஆதாரமாய் ‘ஆதார்.’

அதிநவீன புதுவகை சொகுசு கார் ஒன்று அறிமுகமாகிறது. அதை வாங்க விரும்பும் அந்த பணக்காரப் பெண் ‘டெஸ்ட் டிரைவ்’ போகிறாள். காரை ஓட்டுவதில் ஏற்பட்ட கவனக் குறைவால் விபத்தில் சிக்கும் அவளது உயிர் பிரிகிறது.

கருணாஸ் தன் மனைவி ரித்விகாவை பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கிறார். நல்லபடியாக குழந்தை பிறக்கிறது. ரித்விகா காணாது போகிறார்.

கருணாஸ், காணாது போன மனைவியை கண்டுபிடித்து தரச் சொல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார். அந்த புகாரை ஏனோதானோவென விசாரிக்கும் போலீஸ், ரித்விகா காணாது போனதற்கு பொய்யான ஒரு காரணத்தைச் சொல்லி வழக்கை முடித்து வைக்கப் பார்க்கிறது.

கார் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கும் கருணாஸின் மனைவிக்கும் என்ன தொடர்பு? காணாமல் போன, கருணாஸின் மனைவிக்கு என்னவானது? காவல்துறை யாருக்கு, எதற்கு சாதகமாக செயல்படுகிறது? இதற்கான பதில்கள் திரைக்கதையோட்டத்தில் விரியும்போது காத்திருக்கிறது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
இயக்கம்: ராம்நாத் பழனிகுமார்

விளிம்பு நிலை மனிதர்களின் பிரதிநிதியாக, கட்டிடத் தொழிலாளியாக கருணாஸ். அப்போதுதான் பிறந்த பச்சிளங் குழந்தையை வைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்குமாய் அலைவது, போலீஸார் அக்கறை காட்டாதது கண்டு குமுறுவது, போலீஸிடம் அடிவாங்கி இயலாமையினால் மனமுடைவது என கருணாஸ் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் தனது தேர்ந்த நடிப்பால் பரிதாபத்தை அள்ளுகிறார்.

மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்தில், நடந்த ஒரு கொலைக்கு தானும் துணையாக இருந்த குற்றவுணர்ச்சியை போலீஸுக்கே உரிய கம்பீரம் தொலைத்த தளர்ந்து நடையாலும் அதைவிட தளர்ந்த குரலாலும் வெளிப்படுத்தும் அருண் பாண்டியனின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது.

மனசாட்சியற்ற காவல்துறை உயரதிகாரியாக வருகிற உமா ரியாஸும் கவர்கிறார்.

இரண்டொரு காட்சிகளில் வந்துபோகிற ரித்விகா, இனியா, ஒரேயொரு காட்சியில் எட்டிப் பார்க்கிற ஆனந்த்பாபு, மனிதாபிமானம் சுமந்த மேஸ்திரியாக பி.எல். தேனப்பன்… அனைவரின் நடிப்புப் பங்களிப்பும் கச்சிதம்!

ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும், உணர்வுகளைப் உலுக்கும் பாடல்களும் படத்தின் பெரும் பலம்!

கதையின் பெரும்பாலான சம்பவங்கள் இரவிலேயே நடப்பது ஏன் என்பது புரியவில்லை. கதையின் கிளைமாக்ஸை இன்னும் சற்று எளிதில் புரிந்துகொள்ளும்படி திரைக்கதை அமைத்திருக்கலாம்; வசனம் எழுதியிருக்கலாம்.

உருவாக்கத்தில் சிலபல குறைகள் இருந்தாலும், காவல்துறையின் கழிசடைப் பக்கங்களை – காவல்துறையிலிருக்கும் கீழ்த்தர மனிதர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களின் வரிசையில் ஆதாரின் கதைக்களம் கண்டிப்பாக தனித்துவம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here