வெளியீட்டில் INDIA’s 1st SOPHOMORE FEATURE FILM என புதுமையும், கதையம்சத்தில் சற்றே வித்தியாசமும் காட்டியிருக்கும் படம்.
அந்த இளைஞன், பக்கவாதத்தால் பேசும் திறன் இழந்த வயதான ஒரு விஞ்ஞானியை கவனித்துக் கொள்ளும் கேர் டேக்கர் வேலையில் சேர்கிறான். விஞ்ஞானி வீட்டில் சமையல் வேலை செய்கிற பணிப் பெண்ணுடன் நெருங்கிப் பழகுகிறான். சந்தர்ப்ப சூழலால் தன்னைவிட 30 வயது அதிகமான நபரை திருமணம் செய்துகொண்ட விரக்தியிலிருக்கும் அந்த பெண்ணுடன் உடலால் இணைகிறான்.
நாட்கள் போகப்போக, இருவரும் விஞ்ஞானி சேர்த்து வைத்திருக்கும் பணத்தை அபகரிக்க திட்டமிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவருக்குள்ளும் மோதல் உருவாகிறது.
விஞ்ஞானிக்கு பிசியோதெரபி சிகிச்சையளிக்கும் நபர், விஞ்ஞானி உருவாக்கிய ஒரு மருந்தின் ஃபார்முலாவை கைப்பற்ற முயற்சிக்கிறார்.
மூவரில் யாருடைய திட்டம் நிறைவேறியது? தன்னைச் சுற்றி சதிவலை பின்னப்படுவதை விஞ்ஞானி தெரிந்துகொள்கிறாரா இல்லையா? என்பதே கதை.
படித்த படிப்புக்கேற்ற வேலை அமையாததால் நோயாளியை கழிவறைக்கு கூட்டிப்போகிற, குளிப்பாட்டி பராமரிக்கிற வேலையை வேறுவழியின்றி ஏற்பதாகட்டும், வேலைக்காரப் பெண்ணின் பலவீனத்தை சாதகமாக்கி உடற்சுகத்தை அனுபவிப்பதாகட்டும், சாமர்த்தியமாக பணத்தைச் சுருட்டி சொகுசு வாழ்க்கையில் மிதப்பதாகட்டும் நாயகன் ஸ்ரீ நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார்.
தேகத்தின் செழுமையால் வசியம் செய்கிற வசுதா கிருஷ்ணமூர்த்தி தெனாவட்டுப் பேச்சாலும், வில்லத்தனத்தாலும் கவர்கிறார்.
வாய் பேச முடியாமல் படுக்கையிலேயே கிடந்தாலும் உணர்வுகளை, இயலாமையை சின்னச்சின்ன அசைவுகள் மூலம் வெளிப்படுத்தி கதையோட்டத்தில் கலக்கிறார் ராம்ஜி.
சாம்ஸ் காமெடி 5 %, மாறுபட்ட நடிப்பு 95% என புது பரிமாணத்தில் வருகிறார். காமெடியை ரசிக்கவும், நடிப்பை ஏற்கவும் முடிகிறது. அந்த ‘ஆண்டி ஹீரோ’ வசனம் கலகல!
பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் அத்தனையும் கதையின் தேவைக்கேற்ப கச்சிதமான பங்களிப்பை தர,
ஒருசில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, ஒரே வீட்டுக்குள் எளிமையான கதையை விறுவிறுப்பாக தந்திருக்கும் இயக்குநர் வினோ, படத்தின் முதல் மற்றும் மூன்றாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டுகிறார்.
இந்த படம் இந்தியாவின் முதல் Sophomore திரைப்படம் என்ற பெருமையுடன் வெளியாகியிருக்கிறது. மூன்று பாகங்களாக எடுக்கப்பட்ட படத்தின் இரண்டாம் பாகம் இது. இந்த இரண்டாம் பாகம்தான் இப்போது வெளியாகியிருக்கிறது. இந்த வித்தியாசமான முயற்சியைத்தான் Sophomore என்று குறிப்பிடுகிறது படக்குழு!