ஐயப்ப பக்தர்கள் பலரது கூட்டு முயற்சியில், ஸ்ரீ வெற்றிவேல் ஃபிலிம் அகாடமி சார்பில் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ என்ற படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை, இயக்கம் என 6 முக்கிய பொறுப்புகளை இயக்குநர் ராஜாதேசிங்கு கையாண்டுள்ளார்!
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் மிக பிரமாண்டமான முறையில் ஐம்பது லட்சம் ரூபாய் பொருட்செலவில் கிராஃபிக்ஸ் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் ஐயப்பன் விஸ்வரூப அவதாரமாக பதினெட்டு கரங்களில், பதினெட்டு ஆயுதங்களுடன் காட்சியளிக்கிறார்.
இத்தனை வருடங்களில் அம்மன், சிவன், விஷ்ணு, விநாயகர், முருகர், அணுமன் என இந்த கடவுள்களை மட்டுமே விஸ்வரூபமாக பார்த்த நாம், நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக சினிமாவில் முதல் முறையாக 33 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் இந்த ஐயப்பன் படத்தில் விஸ்வரூப ஐயப்பனை பார்க்க போகிறோம் என்கிறார் இயக்குநர் ராஜா தேசிங்கு.
இந்த திரைப்படத்தில் ஐயப்பன் மட்டுமின்றி காவல் தெய்வம் கருப்பசாமியும் விஸ்வரூபமாக காட்சி தர உள்ளார். சிலையாக இருக்கும் கருப்பசாமி சாலைகளிலும், ஆற்றிலும் நடந்து வரும் பிரம்மிக்கத்தக்க கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளது.
படத்தில் கிட்டத்தட்ட 20 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அவற்றை நிறைவு செய்யும் பணியால் படம் வெளியாக தாமதமானதாகவும், அந்த பணிகள் நிறைவடைந்துவிட்டதால் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்கின்றனர் படக்குழுவினர்.
படத்தில் விஜயபிரசாத், பூஜா நாகர், சோனா, கஞ்சா கருப்பு, சாம்ஸ், முத்துக்காளை, ராஜேந்திரநாத், வடிவேல் கணேஷ், உடுமலை ரவி, மங்கி ரவி, போண்டா மணி, இந்திரன், ராஜாசாமி, விஷ்வகாந்த், சுமதி, சின்னாளப்பட்டி சுகி, லதா, சுவேதா மற்றும் இயக்குநர் ராஜாதேசிங்கு ஆகியோர் நடித்துள்ளனர்.
நடனம் சஞ்சிவ் கண்ணா, சண்டை பயிற்சி சரவெடி சரவணன், இசை பாபு அரவிந்த், படத்தொகுப்பு எஸ்.பி.அகமது, ஒளிப்பதிவு மகேஷ் மகாதேவன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
