நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா முதன்முறையாக முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘பீனிக்ஸ்’ (வீழான்) படத்தின் மூலம், முதன்முறையாக இயக்குநராகிறார் பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் அனல் அரசு

படத்தை இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அனல் அரசு இந்திய சினிமாவில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றி வருகிறார். அவருடன் இணைந்து இந்த படத்தை ‘ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ்’ ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிக்கிறார்.

அனல் அரசு இயக்கவிருக்கும் படத்தின் தொடக்க விழா நவம்பர் 24; 2023 அன்று சென்னையில் நடந்தது. அப்போது பேசிய அவர், ‘‘நான் இயக்கும் முதல் திரைப்படத்தை சிறந்த படைப்பாக கொடுக்க ஆவலுடன் இருக்கிறேன்.

நாங்கள் ‘ஜவான்’ படப்பிடிப்பில் இருந்தபோது, விஜய் சேதுபதியின் மகன் தனது தந்தைக்கு மதிய உணவு பரிமாறுவதற்காக செட்டுக்கு வந்திருந்தார். அவர் அதிரடியான சண்டைக் காட்சிக்கான தயாரிப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் என் கதையில் நடிக்க அவர் பொருத்தமானவராக இருப்பார் என்பதை உணர்ந்தேன். எனது எண்ணத்தை விஜய் சேதுபதியிடம் பகிர்ந்து கொண்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரை தமிழ் சினிமாவில் இந்த படத்தின் மூலம் கதைநாயகனாக அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

நிகழ்வில் கதைநாயகன் சூர்யா பேசியபோது, ‘‘நீண்ட நாட்களாக சண்டைக் காட்சிகளில் நடிக்க விரும்புகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அதை சரியாகப் பயன்படுத்த விரும்புகிறேன். இந்த படத்திற்காக ஆறு மாதம் பயிற்சி எடுத்தேன். இந்த படத்தில் நடித்து, அப்பாவின் சாயல் ஏதுமில்லாத எனக்கான தனி அடையாளத்தை உருவாக்குவேன். எனது தந்தையின் நடை வேறு, அவரது நடை வேறு” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here