ஈகோ மோதல் மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு எடுத்துகாட்டாய் ஒரு படம். ‘விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை’ என்ற கருத்தை விதைத்துள்ள ‘பார்க்கிங்.’
அரசாங்கப் பணியிலிருக்கிற பெரியவர் இளம்பரிதி மனைவியோடும் மகளோடும் 10 வருடங்களாக வசிக்கும் வாடகை வீட்டின் மாடி போர்சனில், இளைஞன் ஈஸ்வர் காதலித்து கல்யாணம் செய்துகொண்ட தன் மனைவியோடு குடி வருகிறார். வந்தவர் புதிதாக கார் வாங்கிவந்து வீட்டு வளாகத்தில் நிறுத்த அது பைக் வைத்திருக்கும் பெரியவருக்கு இடைஞ்சலாகிறது. அதையடுத்து அவர், இளைஞனிடம் காரை வெளியில் நிறுத்தச் சொல்ல, அவன் முடியாது என்று மறுக்க இருவருக்குள்ளும் இந்தியா பாகிஸ்தான் பார்டர் பிரச்சனை அளவுக்கு ஈகோ யுத்தம் துவங்குகிறது. அடிதடி, கார் கண்ணாடி உடைப்பு, போலீஸில் புகார் என அடுத்தடுத்த நாட்கள் ரணகளமாய் நகர்கிறது.
ஈஸ்வரை அவமானப்படுத்த, தண்டிக்க பெரியவர் தரை லோக்கலாக இறங்குகிறார். அவரை பழிவாங்க ஈஸ்வர் ஸ்மார்ட்டாக யோசிக்கிறார். பெரியவர் அதைவிட கிரிமினலாக யோசிக்கிறார். அதன் விளைவுகளும் விபரீதங்களுமே படத்தின் மிச்சசொச்ச கதை. இயக்கம் ராம்குமார் பாலகிருஷ்ணன்
ஈஸ்வராக வருகிற ஹரிஷ் கல்யாண் எப்போதும்போல் இளமையாக இருக்கிறார். கார் பார்க்கிங் விஷயம் விவகாரமாகும்போது ஆக்ரோஷம் காட்டுவது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும்போது மனமுடைவது, பழிக்குப் பழிவாங்க களமிறங்குவது, மனைவியின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தன் மனதுக்கு சரியென பட்டதை செய்வது என காட்சிக்கு காட்சி அவரது நடிப்பில் அத்தனை முதிர்ச்சி!
எந்த பாத்திரமானாலும் 100% அந்த பாத்திரமாகவே மாறிவிடுகிற எம்.எஸ். பாஸ்கருக்கு இதில் நெகடிவ் கேரக்டர். இளம்பரிதி என்ற பெயரில் வருகிற அந்த மனிதர், திருமண வயதில் தனக்கொரு பெண் இருந்தும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்கும்போது முகத்தில் காட்டும் வில்லத்தனம் அவர் ஏற்ற சைக்கோதனமான கேரக்டருக்கு முழுமையான உயிரோட்டம் தந்திருக்கிறது. காமெடி துளிகூட எட்டிப்பார்த்துவிடாதபடி அவரது பாத்திரப் படைப்பை உருவாக்கியிருப்பதற்காக இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டு!
ஹரீஷ் கல்யாணின் காதல் மனைவியாக, கர்ப்பிணிப் பெண்ணாக, தாய் தந்தையின் ஆதரவற்ற நிலையில் இந்துஜா. அம்மணி சிரித்தால் அத்தனை கியூட்டாக இருப்பார். ஆனால், அதற்கு இடம் தராத கதையில் கணவர், கீழ் வீட்டுக்காரர் என இரண்டு சைக்கோ பேர்வழிகளிடம் மாட்டிக்கொண்டு, வருகிற காட்சிகளிலெல்லாம் கண்கலங்கி பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார்.
நியாயத்தின் பக்கம் நிற்கிற ஹவுஸ் ஓனராக இளவரசு. மிகச்சில காட்சிகளில் வந்தாலும் அனுபவ நடிப்பு கவர்கிறது.
எம்.எஸ். பாஸ்கரின் மனைவியாக வருகிற ரமா, மகளாக வருகிற பிரார்த்தனா என இன்னபிற கதாபாத்திரங்களைச் சுமந்திருப்பவர்களின் நேர்த்தியான நடிப்பும் காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.
கதையோட்டத்தை வலுப்படுத்த பின்னணி இசைமூலம் தன்னால் இயன்ற பங்களிப்பை தந்திருக்கிறார் சாம் சி எஸ்.
நகரத்தில் வாடகை வீட்டில் வசிக்கிற மக்கள் பலரும் சந்திக்கிற பார்க்கிங் பிரச்சனையை மையப்படுத்தி பாராட்டும்படி எளிமையாக ஒரு கதையை உருவாக்கிய இயக்குநர், தங்களின் கோபத்தின் வெளிப்பாடும் செயல்பாடும் தங்கள் மத்தியில் வாழ்கிற, கர்ப்பம் தரித்திருக்கிற பெண்ணுக்கு மனதளவிலும் உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யோசிக்காமல், ஒரு இளைஞனும் ஒரு கிழவரும் மனிதாபிமானத்தை தூக்கிவீசிவிட்டு மோதிக் கொள்ளும் விதத்தில் நகரும் திரைக்கதை மனதை ரணப்படுத்துகிறது. அந்த கிளைமாக்ஸ் காட்சியில் புதுமையேதுமில்லை. எதிர்பார்த்ததுதான்.
திரைக்கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், படத்தை மக்கள் மனதில் பெரியளவில் தூக்கி நிறுத்தியிருக்கலாம்!