வேற்றுக் கிரக மனிதனை கதையின் முக்கிய கதாபாத்திரமாக்கி புதுமை செய்திருக்கும் தமிழ் சினிமா.
வேற்றுக் கிரகத்திலிருந்து பூமிக்கு வருபவர்கள் என்றாலே அவர்களால் மனிதர்களுக்கு ஆபத்து என்பதுபோலவே ஹாலிவுட் படங்களில் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன நமக்கு, வேற்றுக் கிரகவாசி மக்களுக்கு நல்லது செய்ய பூமிக்கு வருவதாக கதைக்களம் அமைத்து தனித்துவம் காட்டியிருக்கிற ‘அயலான்.’
விண்ணிலிருந்து பூமிக்கு வந்த சிறு கல்லை வைத்து மனிதர்களுக்கு பேராபத்து தருகிற செயலில் இறங்க திட்டமிடுகிறான் கார்ப்பரேட் வில்லன். அந்த கல்லைக் கைப்பற்றி மக்களைக் காக்கும் நல்லெண்ணத்துடன் பூமிக்கு வருகிற அயலானுக்கு அதாவது வேற்றுக்கிரக வாசிக்கு அந்த வில்லனால் ஆபத்து உருவாகும் சூழல் உருவாகிறது. அதிலிருந்து அயலானை காப்பாற்றி, அந்த அயலானுடன் சேர்ந்து வில்லனின் சதித் திட்டங்களுக்கு ஆப்பு வைக்க களமிறங்குகிறான் கதாநாயகன். அதன் விளைவுகளும் முடிவும் அடுத்தடுத்த காட்சிகளாக விரிய, சீரியஸான கதையில் நகைச்சுவையும் கலந்துகொள்கிறது… இயக்கம் ரவிக்குமார்
சிவகார்த்திகேயனுக்கு அம்மா மீது பாசம், இயற்கை மீது நேசம், காதலி மீது பிரியம், மக்கள் மீது அக்கறை என சுற்றிச் சுழன்று நடிக்க நல்ல வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அயலானுடன் நண்பனாக பழகுவதாகட்டும், அதனுடன் இணைந்து அதிரடி ஆக்சனில் இறங்குவதாகட்டும், அயலான், கருணாகரன் யோகிபாபு கூட்டணியோடு காமெடி கலாட்டாக்களில் ஈடுபடுவதாகட்டும் இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
அயலானாக வருகிற வேற்றுக்கிரக மனிதனின் குழந்தைத்தனம் தவழும் தோற்றமாகட்டும், உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்களாகட்டும், தனக்கிருக்கும் அதீத சக்தியை நல்லது நடக்க பயன்படுத்துவதாகட்டும், செயல்பாடுகளில் வெளிப்படுகிற குறும்புகளாகட்டும் அத்தனையும் ரசிக்க வைக்கிறது. கதாநாயகன் மீதும் அவனது நண்பர்கள் மீதும் அயலான் காட்டும் பாசப்பிணைப்பு நெகிழ வைக்கிறது.
கதாநாயகனை காதலிப்பது, அவனோடு பாடல் காட்சியில் ஆடுவது என்பதை தாண்டி நடிப்பில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதையும் செய்யமுடியாத கதாபாத்திரத்தில் ரகுல் பிரித் சிங். தனக்கு கொடுத்த பணியை சரியாய் செய்திருக்கிறார். அழகாய் இருக்கும் அவரை பாடல் காட்சி கூடுதல் அழகாக்கியிருக்கிறது என்பது கூடுதல் செய்தி.
கார்ப்பரேட் வில்லனுக்கான வழக்கமான டெம்ப்ளேட்டில், மனிதாபிமானத்தை கழட்டி வைத்த மனிதனாய் வருகிற ஷரத் கெல்கரின் உருட்டலும் மிரட்டலும் கதைக்களத்துக்கு கணிசமான பலம்.
அயலானுடனும் சிவகார்த்தியுடனும் யோகிபாபு, கருணாகரன் கூட்டணி இணைந்து தந்திருக்கும் காமெடி கலகலப்புக்கு கேரண்டி.
கதாநாயகனுக்கு அம்மாவாக இரண்டொரு காட்சிகளில் வந்துபோகிறார் பானுப்ரியா. கதாநாயகனின் நண்பனாக வருகிற பால சரவணன் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகளின் பங்களிப்பு கச்சிதம்.
அயலானுக்கு வசீகரிக்கும் வகையில் குரல் கொடுத்திருக்கும் ‘சித்தா’ சித்தார்த்துக்கு ஸ்பெஷல் பாராட்டு!
ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் மனதில் இடம்பிடிக்க சிரமப்படுகின்றன. பின்னணி இசையிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த அம்சமும் தென்படவில்லை.
ஒளிப்பதிவு, சிஜி தொழில்நுட்பம், கலை இயக்குநரின் உழைப்பு காட்சிகளுக்கு பிரமாண்டத்தைக் கொடுத்திருக்கின்றன.
பல படங்களை நினைவூட்டும் காட்சிகள் படத்தின் பலவீனம்.
குறைகள் இருந்தாலும், அயலான் குழந்தைகளைக் கவர்வான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.