‘மறக்குமா நெஞ்சம்’ சினிமா விமர்சனம்

அந்நாள் மாணவர்கள் இந்நாளில் சந்திக்கிற ‘ரீயூனியன்’ கதைக்களத்தில், ’96’ படத்தின் சாயலில் ஒரு படம். நம் நெஞ்சத்தில் தஞ்சமடைந்திருக்கும் பள்ளிப் பருவ நாட்களின் மறக்கமுடியாத தருணங்களில் மூழ்கவைக்கிற ‘மறக்குமா நெஞ்சம்.’

பள்ளிப் படிப்பின்போது 90ஸ் கிட்ஸ் கார்த்திக், சக மாணவி பிரியதர்ஷினி மீது காதல்வயப்பட, அதை சொல்லாமலே அவளை அவன் பிரிந்துவிடுகிற சூழ்நிலை. அவனோடு அந்த காலகட்டத்தில் படித்த மாணவ மாணவிகள் அனைவரும் பத்து வருடங்கள் கழித்து சந்திக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. கார்த்திக், பிரியதர்ஷினி சந்திப்பு நிகழ்கிறது. அந்த சந்திப்பு தித்திப்பா கசப்பா என்பது கதையின் நிறைவு…

ஒரே பள்ளியில், கல்லூரியில் படித்த மாணவ, மாணவிகள் மீண்டும் சந்திப்பதென்பதெல்லாம் காலங்காலமாக நடப்பதுதான். அப்படியான சந்திப்பு கோர்ட் உத்தரவால் நடப்பதும், அந்த சந்திப்பில் அவர்கள் மீண்டும் மாணவ மாணவிகளாக மாறி, மூன்று மாதகாலம் பாடம் படித்து, தேர்வெழுத வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவதும் இந்த படத்தின் கதையிலிருக்கும் தனித்துவம்!

கார்த்திக்காக ரக்சன். தாடியோடு இருந்தால் இளைஞன், அதை மழித்துவிட்டால் மாணவன். தோற்ற வித்தியாசத்திற்காக சிரமப்படாதது போலவே காதல் உணர்வு, அதை சொல்ல முடியாத தவிப்பு, பிரிவில் ஏக்கம், மீண்டும் சந்தித்தபோது மனதுக்குள் எழும் பரவசம் என உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் சிரமப்படாமல் தனக்கு வருவதை செய்திருக்கிறார்.

பிரியதர்ஷினியாக சுற்றளவில் மெலிதாக இருக்கிற மெலினா. சதுரம், செவ்வகம், நீள்வட்டம், முக்கோணம் என ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு மாதிரி தெரிகிற முகவெட்டுக்கு சொந்தக்காரரான அவர் சிந்துகிற மென் புன்னகை அத்தனை அழகு. ஏற்ற பாத்திரத்துக்கான நடிப்புப் பங்களிப்பில் குறையில்லை.

பள்ளிக்கூட நாட்களில் உருவகேலிக்கு ஆளாகி மனமுடைவது, பத்து வருடங்கள் கழிந்த சந்திப்பில் அழகான மனைவிக்கு கணவனாக என்ட்ரீ கொடுத்து கேலி செய்தவர்களை வியக்க வைப்பது, பெருத்த உடம்பை வைத்துக்கொண்டு அட்டகாசமாக ஆடி ஆச்சரியப்பட வைப்பது என கவனம் ஈர்க்கிறார் பிராங்க்ஸ்டர்’ ராகுல்.

உடற்பயிற்சி ஆசிரியரான முனீஸ்காந்த் தனது பீ டி பீரியடை கணக்கு டீச்சருக்கு விட்டுக்கொடுத்து பின்னாளில் அவரையே வீட்டம்மாவாக்கிக் கொள்வது ரசிக்கவைக்கும் ரகளை. காமெடியை தாண்டி அவருக்குள்ளிருக்கும் தேர்ந்த நடிகரை வெளிப்படுத்தவும் அந்த நடிப்பால் நெகிழவைக்க வாய்ப்பு தந்திருக்கிறது திரைக்கதை.

கதாநாயகனுக்கு நண்பனாக வருகிற தீனா கொஞ்சமாய் சிரிப்பூட்டுகிறார். மாணவிகளாக வருகிற ஆஷிகா, ஸ்வேதா, நட்டாலியா உள்ளிட்டோரின் பங்களிப்பும் மற்றவர்களின் நடிப்பும் நேர்த்தி.

பள்ளிக்கூடம், மாணவ மாணவிகள் என இளமைத் துடிப்போடு கடந்தோடும் காட்சிகளுக்குப் பொருத்தமான பின்னணி இசையையும், பாடல்களையும் தந்திருக்கிறார் சச்சின் வாரியர்.

உணர்வுகளின் கலவையாய் நீள்கிற காட்சிகளை தனது ஒளிப்பதிவின் மூலம் உயர்த்திக் காட்டியிருக்கிறார் கோபி துரைசாமி.

குறைகள் சில இருந்தாலும்,

ரீயூனியன் என்றால் ஒருநாள் சந்திப்பு, உற்சாகத்தில் மிதப்பு என்ற வழக்கத்தை மாற்றி அதே சந்திப்பு நீதிமன்ற உத்தரவால் அரங்கேறுவது, பழைய நண்பர்கள் மீண்டும் மூன்று மாதகாலம் கலந்து பழகுவது என கதைக்களத்தில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிற இயக்குநர் ராகோ யோகேந்திரனின் திறமையை, படத்தில் முழுமையாக சிகரெட், மது வாடையை தவிர்த்திருப்பதை பாராட்டாமல் விட முடியாது.

மறக்குமா நெஞ்சம், சில காட்சிகளின் உயிரோட்டத்தால் மனதில் தங்கும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here