‘எனக்கு என்டே கிடையாது’ சினிமா விமர்சனம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவருகிற திரைப்படங்களின் வரிசையில் இந்த வார புதுவரவு ‘எனக்கு என்டே கிடையாது.’

படத்தில் ஹீரோயின் தவிர மற்றவர்களும் புதுவரவு என்பது கூடுதல் தகவல்.

உயர்தர பாரில் மது அருந்தி போதையில் மிதந்து கொண்டிருக்கும் அந்த பெண், வீட்டுக்குப் போக கால் டாக்ஸியில் ஏறுகிறாள். டிரைவர் அவளோடு பேச்சுக் கொடுக்க, அவளும் நன்றாகப் பேச உருவாகிவிடுகிறது அவர்களுக்குள் உடனடி நட்பு.

வீட்டில் இறங்கும்போது அவள் அவனிடம், ‘நான் மீண்டும் மது அருந்தப் போகிறேன். நீயும் என்னோடு சேர்ந்து கொள்’ என ஆசையைத் தூண்டி வீட்டுக்குள் வரச் சொல்லி அழைக்கிறாள். சம்மதித்து உள்ளே போகிறான்; அவளோடு சேர்ந்து குடிக்கிறான்.

இருவருக்கும் போதையேறியபின், அவள் ‘அந்த’ விஷயத்துக்கு அவனை தூண்டுகிறாள். அவனையும் அவளையும் தவிர யாருமில்லாத அந்த தருணத்தில், அவள் நினைத்தது நிறைவேறுகிறது.

‘பிட்டுப் படம் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ?’ என்ற சந்தேகம் நமக்குள் வரும்போது, சட்டென கதையின் பாதை மாறுகிறது.

அந்த வீட்டுக்குள் ரத்தம் வழிந்தபடி ஒரு ஆணுடைய சடலம் கிடப்பதை அந்த டிரைவர் பார்க்கிறான். இறந்திருப்பது தன் கணவன் என்கிறாள் அவள்.

ஆல்கஹாலில் தொடங்கி அல்வா சாப்பிட்டது வரை (அல்வா எதுன்னு புரியாட்டி நீங்க அநியாயத்துக்கு பச்ச மண்ணா இருக்கீங்கன்னு அர்த்தம்) நடந்தது அத்தனையும் வில்லங்கம்; இனி நடக்கப்போவது விபரீதம்’ என அவனுக்கு புரிகிறது.

வீட்டை விட்டு வெளியேற நினைக்கிறான்; அவள் தடுக்கிறாள். அவர்களுக்குள் சிறு மோதல் ஏற்பட சரிந்து விழுகிறாள். அந்த சந்தர்ப்பத்தில் கதவை நோக்கி ஓடுகிறான். முழுக்க முழுக்க டிஜிட்டல் லாக், சிசிடிவி என டெக்னாலஜி சூழ்ந்திருக்கும் அந்த வீட்டின் கதவு தன்னை திறக்க பாஸ்வேர்டு கேட்கிறது. தவித்துப் போகிறான்…

அந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்குள் திருடன் ஒருவன் நுழைகிறான். அடுத்ததாக லட்சக்கணக்கில் பணத்தை எடுத்துக் கொண்டு அரசியல்வாதியொருவரும் வந்து சேர்கிறார். மூவரும் சந்திக்கிறார்கள். அந்த பெண் இறந்து விட்டது தெரியவருகிறது.

ஏற்கனவே வீட்டுக்குள் ஒரு பிணம் கிடக்க, இப்போது இன்னொன்று. உடனடியாக வீட்டை விட்டு வெளியேறாவிட்டால் மூவருக்கும் ஆபத்து என்கிற நிலைமையில், கதவைத் திறக்க சாத்தியமில்லை என்ற சூழ்நிலை.

டிஜிட்டல் லாக் சிஸ்டம், அலாரம் என்றெல்லாம் உச்சகட்ட பாதுகாப்பிலிருக்கும் அந்த வீட்டுக்குள் திருடனும் அரசியல் வாதியும் வந்தது எப்படி? அரசியல்வாதிக்கும் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு? அவளுடைய கணவன் இறப்புக்கு யார் காரணம், என்ன காரணம்? இப்படியான கேள்விகளுக்கு இயக்குநர் விக்ரம் ரமேஷ் அமைத்திருக்கும் திரைக்கதையில் பதில்கள் இருக்கிறது; அதில் சின்னச்சின்ன சுவாரஸ்யங்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறது!

படத்தில் மிகச்சில நடிகர்கள் மட்டுமே, அவர்களும் புதுமுகங்கள். படம் முழுக்க ஒரு பங்களா, அதில் வேவ்வெறு அறைகள் என சுற்றிச் சுற்றி வருகிற காட்சிகள். ஆனாலும் திரைக்கதையிலிருக்கும் திருப்பங்கள் சலிப்பு தராமல் பார்த்துக் கொள்கின்றன!

படத்தை இயக்கியவரே கால் டாக்ஸி டிரைவராக முதன்மை பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இயக்கத்துக்கும் நடிப்புக்கும் புதியவர் என்றாலும் அது தெரியாதபடி இருக்கிறது அவரது இயக்கமும் நடிப்பும்!

நாயகி ஸ்வயம் சித்தாவின் சற்றே கவர்ச்சியான உடல்வாகு அவருக்கு கொடுக்கப்பட்ட விவகாரமான பாத்திரத்துக்கு வீரியம் சேர்த்திருக்கிறது. போதையில் கிறங்கியபடியே பேசுவது, கண்களில் காம உணர்வை கசியவிடுவது என அம்மணி அசத்தியிருக்கிறார்.
தன்னுடன் மது அருந்துபவணின் கடைசி ‘பெக்’குக்கு சைடு டிஷ்ஸாக இதழ்களைக் கொடுப்பது செம கிக்!

அரசியல்வாதியாக வருகிறவர், ஹைடெக் திருடனாக (இந்த படத்தின் தயாரிப்பாளர்) கார்த்தி இருவரின் நடிப்பும் கச்சிதம்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு அத்தனையும் கதைக்களத்தை மெருகேற்றியிருக்கிறது.

வித்தியாசமான, சுவாரஸ்யமான படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் ‘எனக்கு என்டே கிடையாது’ இந்த வீக் என்டை திருப்தியாக்கும்.

REVIEW OVERVIEW
‘எனக்கு என்டே கிடையாது' சினிமா விமர்சனம்
Previous article‘தி ரோட்’ சினிமா விமர்சனம்
Next article‘ஷாட் பூட் த்ரீ’ சினிமா விமர்சனம்
enaku-endey-kidaiyaathu-movie-reviewவித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவருகிற திரைப்படங்களின் வரிசையில் இந்த வார புதுவரவு 'எனக்கு என்டே கிடையாது.' படத்தில் ஹீரோயின் தவிர மற்றவர்களும் புதுவரவு என்பது கூடுதல் தகவல். உயர்தர பாரில் மது அருந்தி போதையில் மிதந்து கொண்டிருக்கும் அந்த பெண், வீட்டுக்குப் போக கால் டாக்ஸியில் ஏறுகிறாள். டிரைவர் அவளோடு பேச்சுக் கொடுக்க, அவளும் நன்றாகப் பேச உருவாகிவிடுகிறது அவர்களுக்குள் உடனடி நட்பு. வீட்டில் இறங்கும்போது...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here