‘ஷாட் பூட் த்ரீ’ சினிமா விமர்சனம்

‘புள்ள குட்டிகளோட போய் பாக்குற மாதிரி படமே வரமாட்டேங்குது’ என பெற்றோர்கள் புலம்பிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், புள்ள குட்டிகளே ஹீரோக்களாக நடித்திருக்கும் ‘ஷாட் பூட் த்ரீ.’

சிறுவன் கைலாஷ் பாசம் காட்டி, ‘மேக்ஸ்’ என பெயர் சூட்டி வளர்க்கும் நாய் காணாது போய்விடுகிறது. மனம் கலங்கிப் போன அவன் அவனது சிநேகிதர்களோடும், சிநேகிதியோடும் மேக்ஸை தேடியலைகிறான்.

அந்த நேரமாகப் பார்த்து தெருநாய்களை வளைத்துப் பிடித்து, மயக்க மருந்து கொடுத்து, மண்ணில் புதைக்கத் திட்டமிட்டு அரசாங்க ஊழியர்கள் வேனில் வலம் வருவது அவர்களின் கவனத்துக்கு வருகிறது.

ஏற்கனவே, மேக்ஸ் எங்கு போனதோ, என்னவானதோ என பதற்றத்தோடு தேடிக் கொண்டிருக்கிற கைலாஷ் டீமுக்கு, மேக்ஸ் அரசு ஊழியர்களிடம் சிக்கிவிடுமோ என்ற பயமும் தொற்றிக் கொள்கிறது.

இப்படி அவர்கள் சந்திக்கும் சவால்களும், விதவிதமான அனுபவங்களுமே கதையோட்டம்…

‘மனிதனை விட உயர்தர நாய்க்கு சமூகத்தில் மதிப்பு அதிகம்’ என்பதை சில காட்சிகள் அழுத்தந்திருத்தமாய் எடுத்துச் சொல்கின்றன.

காணாதுபோன மேக்ஸை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் சிறுவர்களாக கைலாஷ், வேதாந்த் வசந்த், சூப்பர் சிங்கரில் அசத்திய பூவையார், சன் சிங்கரில் கலக்கிய பிரணதி…

மேக்ஸை தேடுவதில் கைலாஷ் காட்டும் பரபரப்பு அதன் மீதான பாசத்தை காட்டிவிடுகிறது.

கைலாஷிடம், ‘கவலைப் படாதே’ என ஆறுதல் வார்த்தை பேசி, ‘நீ அப்படி போய் தேடு, நான் இப்படி தேடறேன்’ என்றெல்லாம் ஆலோசனை சொல்லி வழிநடத்தும் பூவையாரின் நடிப்பும்,

பொருளாதார பலமில்லாததால் தன்னால் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாது என்பதை போகிறபோக்கில் மிக சாதாரணமாக எடுத்துச் சொல்வதும் கவனிக்க வைக்கிறது.

பிரணதி துடிப்பாக நடித்திருப்பதோடு, மயக்கும் குரலில் ‘சிங்காரவேலனே தேவா’ பாடலின் சில வரிகளையும் பாடுகிறார்.

சிறுவன் வேதாந்த்தின் கனத்த உடம்பு சின்னச்சின்ன காமெடிக்கும், கச்சிதமான நடிப்பு கதையோட்டத்துக்கும் உதவியிருக்கிறது.

கைலாஷின் பாசக்கார அப்பாவாக இயக்குநர் வெங்கட் பிரபு, கண்டிப்பான அம்மாவாக சிநேகா. ஜோடிப் பொருத்தம் அசத்துகிறது; நடிப்பில் உயிரோட்டம் அதிகமிருக்கிறது.

விலங்கு நல ஆர்வலராக ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார் சிவாங்கி.

தான் ஓட்டும் ஆட்டோவில் தானாக வந்து சிக்கிய உயர்ரக நாயை பெரிய தொகைக்கு விற்கத் துடிப்பது, அதற்கான முயற்சிகள் சொதப்பலாக முடிவது என யோகிபாபுவை சுற்றிச்சுழலும் காட்சிகள் படு சுவாரஸ்யம்.

பிரணதியின் அப்பாவாக படத்தின் இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன். கொஞ்ச நேரமே வந்தாலும் தன் மகளின் பாடும் திறமையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததை நினைத்து வருத்தப்படுவதும், அவளை ஊக்குவிக்க முன்வருவதுமாய் தனித்து தெரிகிறார்.

சிறுவன் வேதாந்தின் அம்மாவாக வருகிற கோமல் சர்மா, ‘கவிதாலயா’ கிருஷ்ணன், சாய் தீனா என இன்னபிற நடிகர்களின் பங்களிப்பு நேர்த்தி.

அந்த கோல்டன் ரெட்ரீவர் ரக நாயின் துறுதுறுப்பு வெகுநாட்களுக்கு மனதில் தங்கும்!

வீணையிசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு சுறுசுறுப்பை தர, பாடல்களுக்கான மெட்டு ரசனைக்கு விருந்தாகியிருக்கிறது.

நல்லதொரு கதைக்கருவை கையிலெடுத்து, சிறு பிள்ளைகளின் உலகிற்குள் பயணித்து, அவர்களின் மனநிலையை அலசி ஆராய்ந்து காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் அருண் வைத்தியநாதனின் சமூக அக்கறை ரொம்பவே பெரிது!

ஷாட் பூட் ‘த்ரி’, கதையம்சத்தில் ‘ஃபோர்’, திரைக்கதையில் ‘சிக்ஸர்!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here